பஞ்சமி நிலம் என்றால் என்ன மற்றும் அதன் வரலாறு
பஞ்சமி நிலம் (Depressed Class Land) என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ஆம் ஆண்டில் பிரித்தானியவின் இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.
வரலாறு
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பறையர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16 ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும், 2.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களுக்கு நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதிதிராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற காரணத்தால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.
பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ளது.
1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா என்பவர் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன. Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக