கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
| கருணைக் கொலை |
அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்கள் சம்மதத்துடன் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது.
குணப்படுத்த முடியாத, கோமா நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை கருணைக கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்திருந்தன. இந்நிலையில், கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி “காமன் காஸ்" அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இம்மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி ஒவ்வொரு மனிதரும் கவுரவமாக உயிரிழக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவின்படி கவுரவமாக வாழும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கருணைக் கொலைகிகு அனுமதி அளித்தால் இந்த அனுமதி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று வாதிடப்பட்டது. கருணைக் கொலை தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு :
ஒருவர் கவுரமாக உயிரிழப்பதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். எனவே, உயிர் சாசனம் (லிவிங் வில்) மற்றும் “பாசிவ் யூதனேசியா' எனப்படும் கருணைக் கொலை ஆகியவை சட்டப்படி செல்லும். குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் மற்றும் கோமா நிலைக்குச் சென்று விட்டவர்கள் கவுரமாக தங்கள் உயிரை முடித்துக் கொள்வதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையியல் அடங்கும்.
| கருணைக் கொலை |
குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள உயிர் சாசனம் எனப்படும் முன்அனுமதி அளிக்கலாம். முடிவெடுக்க முடியாத கோமா நிலைக்குச் சென்றவர்களாக இருந்தால் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்த முடிவை எடுக்கலாம். இந்த முடிவு அதற்கென அமைக்கப்படும் மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பிறகே கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை மத்திய அரசு புதிய சட்டம் இயற்றும்வரை அமலில் இருக்கும்.
இந்த விஷயத்தில் நீதிபதிகள் மத்தியில் 4 விதமான கருத்துகள் இருந்தாலும், கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய வழக்குகளின் விவரம்
இதே போன்ற வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
"பி. ரத்தினம் எதிர் மத்திய அரசு’ வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ல் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையின் கீழ், சாகும் உரிமையும் உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
“அருணா ராமச்சந்திர ஷான்பாக் எதிர் மத்திய அரசு” வழக்கில் கருணைக் கொலைக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.
"கியான் கவுர் எதிர் பஞ்சாப் அரசு” வழக்கில், தற்கொலை மற்றும் கருணைக் கொலை இரண்டுக்கும் இந்திய சட்டத்தில் அனுமதி இல்லை என்று 5 நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக